கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்







கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது.


ஒரு ஏழை, பொருட்செல்வம் வேண்டி இறைவனை நினைத்துத் தவமிருந்தான்.


அவன் முன் இறைவன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்?’ என்றார்.


‘எனக்குப் பணக்காரனாவதற்கு பணம் வேண்டும்’ என்றான்.


இறைவனோ, ‘சரி.. இதை வைத்துக்கொள்’ என்று ஒரு தடிக்கம்பைக் கொடுத்தார்.


அதற்கு அந்த ஏழை, ‘நான் பணம் கேட்டால் தடியைத் தருகிறீர்களே’ என்றான்.


‘இந்தத் தடியை உனக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் தட்டினால், ஆயிரம் தங்கக் காசுகள் கிடைக்கும். நீ எப்பொழுது பணம் வேண்டும் என்று நினைக்கிறாயே, அப்பொழுதெல்லாம் இந்த தடியைத் தட்டினால் ஒவ்வொரு முறையும் ஆயிரம் பொற்காசுகள் உனக்குக் கிடைக்கும்’ என்றார் இறைவன்.


ஏழை மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போதே, ‘ஆனால் ஒரு நிபந்தனை’ என்றார் இறைவன்.


ஏழை என்ன ஏதென்று தெரியாமல் விழித்தான்.


இறைவன் தொடர்ந்தார். ‘உனக்கு கோபம் வரக்கூடாது. அப்படி வந்தால், தடி உன்னைவிட்டுப் போய்விடும். கோபம் மட்டுமில்லாமல் இருந்தால், இந்தத் தடி எப்பொழுதும் உன்னிடமே இருக்கும்’ என்று சொல்லி மறைந்துவிட்டார்.


ஏழை ஒரு முறைத் தட்டினான். ஆயிரம் தங்கக்காசுகள் கிடைத்தன. அதை அள்ளி மூட்டையாகக் கட்டிக்கொண்டு, வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.


வழியில் அவனுக்கு எதிரே ஒரு சன்னியாசி வந்து கொண்டிருந்தார். அவர் ஏழையிடம், ‘ஏனப்பா.. எங்கே போய் வருகிறாய்?’ என்று கேட்டார்.


நடந்ததைச் சொல்லித் தங்கக் காசைக் காட்டினான்.


‘அப்படின்னா இப்ப அந்த தடியைத் தட்டு பார்க்கலாம்?’ என்றார்.


உடனே ‘இதோ பாருங்கள். தட்டுகிறேன்’ என்று தட்டினான்.


அதிலிருந்து ஆயிரம் பொற்காசுகள் விழுந்தது. அதையும் அந்த ஏழை எடுத்துக்கொண்டான்.


இதைப் பார்த்த சன்னியாசி, ‘இதேபோல் எப்பவும் வருமா?’ என்றார்.


‘நாளைக்குத் தட்டினால் கூடவா?’


ஏழை ‘ஆமாம்’ என்றான்.


‘இன்னும் ஒருமாதம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்று மீண்டும் கேட்டார் அந்த சன்னியாசி.


‘ஆமாம்’ என்றான்.


‘ஒரு வருடம் கழித்துத் தட்டினால் கூடவா?’ என்றார்.


ஆமாய்யா.. போய்யா சும்மா உயிரை எடுக்காதே’ என்று கோபத்தில் பேசினான், அந்த ஏழை.


அவன் அப்படி கோபப்பட்ட அந்த நொடியே, பொற்காசுகளும், தடியும் மறைந்து விட்டது. சோதிக்க வந்த இறைவனும் தான்.


கல்லுக்குள் தேரையும், கனிக்குள் புழுவையும், நெல்லுக்குள் பதரையும், சொல்லுக்குள் தீமையும் கலந்தே இருப்பது போல, நல்ல மனிதர்களிடம் சினமும் இணைந்தே இருக்கிறது. அதை மட்டும் போக்கிவிட்டால் அனைத்து செல்வமும் நம்முடனேயே இருக்கும். அந்த கோபத்தை அகற்றும் இறைவனை எப்போதும் நாடுவோம். 


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்