தாயின் பாசம் மற்றும் மகளின் பாசம் எது பெரியது?



♥ சில பிள்ளைகள் மட்டுமே, இவ்வுலகில் பாசத்தை வெளிக்காட்டுகின்றன. அநேக பிள்ளைகளுக்கு, பாசத்தை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று கூட தெரிவது இல்லை. தங்களுக்குள்ளேயே பாசத்தை வைத்துக்கொண்டு ஏங்குகிறார்கள். இவ்வாறு ஏங்கிய ஒரு பிள்ளையின் பாசத்தைத்தான், நான் உதாரணமாக விளக்க விரும்புகிறேன். இச்சம்பவத்தில் தாய்ப்பாசத்தை விட, பிள்ளைப் பாசம்தான் அதிகமாக மேலோங்கி இருப்பதை காண முடியும்…

♥ஒரு ஊரில் யாமினி என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் எப்போதும் துறுதுறுவென்று இருப்பாள். எப்பேற்பட்டவர் என்றாலும் ஒரு நொடியில் தன் வசம் இழுத்துவிடுவாள், தன் குழந்தைத்தனமான பேச்சில்.

♥அந்த யாமினிக்கு, அவளது பெற்றோர் அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அவளது தாயும் வேலைக்கு சென்றாள். தாயானவள் வேலைக்கு செல்லும் போது, அவளது பாட்டி, யாமினியை கவனித்துக் கொள்வார். ஒரு நாள் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கையில் யாமினி, காலை உணவு உண்ண அடம் பிடித்துக் கொண்டிருந்தாள்.

♥அம்மா ஊட்டி விட்டால் தான் சாப்பிடுவேன்” என்று அடம் பிடித்தாள். “சரி வா” என்று அவசர அவசரமாக, அவளுக்கு அவளது தாய் உணவு ஊட்டினாள். கடைசி வாய் உணவு ஊட்டுகையில் தாயின் கையை “நறுக்”கென்று கடித்து விட்டாள், யாமினி. வலி பொறுக்காமல் கன்னத்தில் ஒரு அறை அறைந்துவிட்டு வேக வேகமாக, அவளது தாய் அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள். “என் மகள் தவறு செய்தால் கூட திட்டுவேனே ஒழிய, அவளை அடித்ததில்லை” என நினைத்த தாய்க்கு மகளை அடித்தது மிகவும் உறுத்தலாகவே இருந்தது.

♥அவளை அடித்ததாலோ என்னவோ தெரியவில்லை., அன்று முழுக்க அந்த தாய்க்கு எந்த ஒரு செயலை செய்தாலும் அது தவறாகவே முடிந்தது. மனது முழுக்க தன் மகளின் நினைப்பு தான். “அவளை அடித்த கோபத்தால் எங்கு என்னோடு பேசாமல் போய் விடுவாளோ” என்று தாய்க்கு ஒரு நடுக்கம்.

♥“எப்படி அவளை எதிர்கொள்ள போகிறேன்” என்று தெரியாமல் தவித்தாள், அந்த தாய். அலுவலகம் முடிந்ததும் அவளுக்கு பிடித்த பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு, தாய் சென்றாள். வீட்டு வாசலில் யாமினி நின்று கொண்டிருந்தாள். “என்ன செல்லம் என்ன பண்ணுறீங்க?” என்று கேட்க யாமினி பதிலே பேசாமல் நின்று கொண்டிருந்தாள். வாங்கிய பொருட்களை அந்த தாய் தனது மகளிடம் கொடுத்தாள். யாமினியோ, வாங்க மறுத்தாள். “அய்யோ பிள்ளையை அடித்ததால் கோபத்தில் நம்மகிட்ட பேச மாட்டேங்கிறாளே” என்று மனவருத்தம் அடைந்தாள், அந்த தாய்.

♥மகளிடம் தாய் சென்று, “நீ ஏண்டா அம்மாவை கடித்தாய்? நீ கடித்தது, அம்மாவுக்கு வலிச்சது., அதனால் தான் வலி தாங்காமல் அடிச்சுட்டேன்., வேண்டும் என்றால் அம்மாவை ரெண்டு அடி அடிச்சுடு., பேசாம இருக்காதே” என்று சொன்னதும் “உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் அம்மா?” என்றாள், யாமினி. “என்னடா கேளு” என்றாள், தாய். அலுவலகத்திற்கு சென்றவுடன் நீங்கள் ஒரு தடவையாவது என்னை நினைப்பீர்களா? என்று கேட்டாள், யாமினி. “இல்லைடா., அலுவலக வேலைகள் அதிகம்,

♥அதனால் யாரையுமே நினைக்க மாட்டேன். என் வேலைகளை தான் நினைப்பேன்” என்றேன். அதற்கு யாமினி, “இன்று என்னை நினைத்தீர்களா?” என்று கேட்டாள். “இன்று முழுவதும் உன்னை பற்றி தான் நினைத்தேன், உன்னை அடித்துவிட்டேனே என்று உன்னை நினைத்து வருந்திக்கொண்டே இருந்தேன்” என்றாள் அந்த தாய்.

♥“உங்களோடு என்னால் ஒரு நாள் முழுவதும் செலவிட முடியவில்லை., என் நினைவாவது உங்களோடு நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று நினைத்தேன்., அதனால் தான் கடித்தேன்” என்று சிரித்தபடி பதில் அளித்தாள். “நான் பிறக்கும் போது, நான் உனக்கு கொடுத்த வலியை விடவா நீ அடித்தது எனக்கு வலித்து விட போகிறது? நீ என்னை அடித்தாலும் அணைத்தாலும், நீ தான் என் செல்ல அம்மா., எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அம்மா” என்று கூறி, தனது தாயை அந்த சிறுமி முத்தம் செய்து கொஞ்சினாள்.

♥அவள், அவளது தாயை கொஞ்சிய அந்த நொடி, அந்த தாயின் உள்ளம் பூரிப்படைந்தது. எனவே, பெற்றோர்களே…! குறிப்பாக தாய்மார்களே…! பிள்ளையின் மனதில் இருக்கும் பாசத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். ஏனென்றால், பிள்ளை பாசத்துக்கு முன் நமக்கு எதுவும் பெரிது அல்ல. எனவே, பிள்ளை பாசத்தை முதன்மை படுத்துங்கள். மற்ற வேலையை இரண்டாவதாக வையுங்கள். பிள்ளை பாசத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது. எனவே பாசத்தில் சிறந்தது தாய்ப்பாசம் என்றாலும், அதிக மதிப்புக்குரியது, பிள்ளை பாசமே…! எனவே பிள்ளை பாசத்தை போற்றி மதிப்போம். மங்கையரே…!!!.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்