இன்று உலக பூமி தினம் தலைமுறைகளை காப்போம்
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாது ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து பேணிக் காத்து வருகிறது பூமி. அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை. சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன. இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக, பூமிக்கு மட்டும்தான், உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது.
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றியதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். நாளுக்கு நாள் மாற்றங்களை எதிர்கொண்டுவரும் சூழலில், புவி வெப்பமடைதல் என்பது உலக நாடுகள் சந்தித்து வரும் மிக முக்கியமான பிரச்னை. இதனால், பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால், சிறு சிறு தீவுக் கூட்டங்கள் மூழ்கிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த வகையில், அடுத்த 100 ஆண்டுகளுக்குள் சுமார் 300 கோடி பேர், பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயரக்கூடும் என்று ஓர் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. எரிமலை வெடிப்பு, சுனாமி ஆகியவற்றுக்கும் புவி வெப்பம் அதிகரிப்பதுதான் காரணம் என்கிற வாதத்தையும் மறுக்க முடியாது.
முன்பெல்லாம் மனிதன் வெளியிடக்கூடிய கார்பன் டை ஆக்சைடை கிரகித்துக் கொண்டு ஆக்ஸிஜனை கொடுக்கும் வகையில் ஏராளமான மரங்களும் தாவரங்களும் இருந்தன. இவற்றால், ஓர் இயற்கை சமநிலை தொடரப்பட்டு வந்தது. ஆனால், காலம் செல்ல செல்ல, காடுகளை அழித்தல், தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றம், செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்டவைகளால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இவை, பூமியில் இருந்து 15-60 கி.மீ உயரத்தில் உள்ளதும், சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போன்று விளங்கும் ஓசோன் படலத்தை தாக்குகின்றன. இதனால், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதோடு, தோல் புற்றுநோய், எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும். இயற்கை வளங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால், பருவமழை பொய்த்துப் போவதும், அதனால் தண்ணீர் பற்றாக்குறை, உணவுப் பஞ்சம் ஏற்படுவதையும் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வேளாண் பொருள் உற்பத்தியும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால், வயல்வெளிகள் தொழிற்சாலைகளாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றப் படுவதையும், வறட்சி, அரசின் போதிய கவனமின்மை உள்ளிட்டவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையே நம்மால் காண முடிகிறது. மேலும் ஒலி, காற்று மாசுபடுதலால் பாதிப்பு புவிக்கு மட்டுமல்லாமல் மனிதருக்கும் ஏற்படுகிறது. இயற்கையும், எதிர்காலமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. இயற்கையை மாசுபடுத்தி, அதை சிறுக சிறுக சிதைத்தால் நமது எதிர்காலம் உறுதியாக பாதிக்கப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே, முடிந்தவரை இயற்கையை பேணிக்காத்து, நமது வாழ்வையும், வருங்கால தலைமுறையினரின் வாழ்வையும் சிறப்புற அமைப்போம் என உலக பூமி தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோம். சிந்திப்போம் செயல்படுவோம்.
அற்புதமான தண்ணீர் உலகம்
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் 22ம் தேதியன்று ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது இதன் பிரதான நோக்கம். கடந்த 1970ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’ என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம், இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்த பூமி சுமார் 80 சதவீதம் கடலால் சூழப்பட்டு உள்ளது. பூமிக்குள் இருக்கும் மொத்த தண்ணீரின் அளவு சுமார் 1.39 கோடி கியூபிக் கி.மீ. இதில், நல்ல தண்ணீர், நிலத்தடி நீர் மற்றும் ஏரிகள், குளங்கள் போன்றவற்றில் நிரம்பும் தண்ணீர் அளவு சுமார் 1.07 லட்சம் கியூபிக் கி.மீ. ஆனால், பூமியில் இருக்கும் தண்ணீரில் ஒவ்வொரு நாளும் சுமார் 1,200 கியூபிக் கி.மீ. அளவு ஆவியாகிறது. இதற்கு காரணம் பூமியின் மேற்பரப்பில் உள்ள பசுமை காடுகள் அழிக்கப்படுவதாலும் பூமி வெப்பமாவதாலும்தான். பசுமையை பாதுகாப்பதும் பூமி வெப்பயமாதலைத் தடுப்பதும்தான் நம் முன் உள்ள முக்கிய பணியாக ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.
Comments
Post a Comment