அட்சய திருதியை அன்று தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டுமா?
சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை திதியில் வருவதே அட்சயத் திருதியை ஆகும். அட்சய என்ற சொல்லுக்கு "கேடில்லாமல் குறைவில்லாமல் நிறைவாக வளரக்கூடியது" என்று பொருள். அதாவது 'க்ஷயம்' என்றால் கேடு, 'அக்ஷயம்' என்றால் கேடில்லாத, அழிவற்ற பொருள் என்பதாகும்.
வெள்ளை நிறப் பொருட்கள் அல்லது மஞ்சள் நிறப் பொருட்கள் வாங்குவது நலம் என்று சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளை நிறம் என்றால் பிளாட்டினம் வாங்கி அணிய வேண்டும், மஞ்சள் நிறம் என்றால் தங்கத்தை வாங்கி அணிய வேண்டும் என்பதெல்லாம் சரியானதல்ல.
பொதுவாக தானியங்களில்தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால்தான் திருமணம் முடிந்த பெண்கள் முதன் முதலாக மாப்பிள்ளை வீட்டிற்கு வரும்போது பொன்னி அரிசி போட்டு அதன் மீது காமாட்சி விளக்கு ஏற்றி அதை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு உள்ளே வரச்சொல்வார்கள்.
அட்சய திருதியை அன்று பச்சரிசி வாங்குவது நல்லது. மஞ்சள் துணியில், சிறிது அரிசி எடுத்துக் கட்டி பீரோவிலும், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி டப்பாவிலும் போட்டு வைத்தால் என்றும் குறைவில்லாத உணவு கிடைக்கும்.
அதற்கடுத்து மஞ்சள், இதில் தான் எல்லா மகிமையும் உள்ளது. மஞ்சள் பொடியாகவும் வாங்கலாம், மஞ்சள் கிழங்காகவும் வாங்கலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் என்று ஒன்று இருக்கிறது. அதற்கு தனி சக்தி உண்டு அதை வீட்டில் வாங்கி வைக்கலாம்.
இதுமட்டுமன்று, அன்றைக்கு தானம் செய்தால் நல்லது. தானம் என்றால் அன்னதானம், வஸ்திர தானம் (துணி தானம்) கொடுங்கள். அதாவது அடுத்தவர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கொடுக்க வேண்டும். காசாகக் கொடுக்கக்கூடாது. அவர்களுடைய தேவை என்னவோ அதைப் பூர்த்தி செய்யக்கூடிய பொருட்களை வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தங்கம் என்பது லட்சுமியின் ஒரு அம்சம். தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை, வெள்ளியும் வாங்கலாம். பச்சரிசி, மஞ்சள், வெள்ளி போன்ற பொருட்களெல்லாம் வாங்கி வைக்கும் போது நிச்சயம் லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும்.
Comments
Post a Comment