தயிரின் அற்புத பலன்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
தயிர் உணவின் ஒரு முக்கிய அங்கம். என்னதான் சாப்பிட்டாலும் கடைசியில் தயிர்சாதமோ, மோர் சாதமோ சாப்பிட்டால் தான் வயிறு நிறைந்தது போல் இருக்கும்! வாடா இந்தியர்களுக்கோ தயிர் இல்லாமல் பரத்தா சாப்பிடுவது மிகக் கடினம்! அற்புதமான சுவை கொண்ட தயிர் உடலுக்குத் தரும் பல நன்மைகளும் உள்ளன. அப்படியே சாப்பிட்டாலும் சரி உணவில் சேர்த்துக்கொண்டாலும் சரி தயிர் உங்கள் உடலுக்கு பலப்பல நன்மைகளை அளிக்கும்.
தயிரை சாப்பிடுவதாலும் சருமத்தின் மேல் பூசுவதாலும் கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
செரிமானத்திற்கு உதவுகிறது (Better digestion)
தயிர் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியது, இந்த ஊட்டச்சத்துகள் சாப்பிட்ட உடனே விரைவில் செரிமான மண்டலத்தால் உறிஞ்சிக்கொள்ளப்படும். நாம் சாப்பிடும் பிற உணவுகளில் இருந்து ஊட்டச்சத்துகளை உடல் கிரகித்துக்கொள்ளவும் தயிர் உதவுகிறது. பெப்டிக் அல்சர், ஹெலிகோபாக்டர் பைலோரி நோய்த்தொற்று போன்ற பிரச்சனைகள் சரியாகவும் தயிர் உதவக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இயற்கையான சருமப் பராமரிப்பு (Natural skin care ingredient)
தயிர் விலை குறைந்தது, எப்போதும் கிடைக்கக்கூடியது, இது சருமத்திற்கும் நன்மையளிக்கிறது. இதில் துத்தநாகம் (ஜிங்க்) உள்ளது, அது முகப்பருக்களையும் கரும் பகுதிகளையும் குறைக்க உதவுகிறது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, அழகான தோற்றத்தைக் கொடுக்கிறது. தயிருடன் எலுமிச்சைச் சாறு அல்லது ஆரஞ்சுப் பழச்சாற்றை சேர்த்து முகத்திற்குப் பயன்படுத்தலாம். இது சருமத்தை சிறப்பாக சுத்தம் செய்வதற்கும் சருமத்தில் உள்ள நுண்துளைகளை சுத்தம் செய்வதற்கும் மிகவும் ஏற்றது. அத்துடன் முகத்தை பளிச்சென்றும் சுத்தமாகவும் வைக்கிறது.
வேனிற் கட்டிகளில் இருந்து நிவாரணம் (Sunburn relief)
கோடைக்காலத்தில், வெளியே செல்லாமல் இருந்துவிட முடியாது, ஆனால் ஒரு நாள் வெளியே சென்றாலும் கோடை வெப்பத்தால் வேனிற் கட்டிகள் தோன்றி சருமம் கருத்துவிடும். இதற்கு தயிர் உடனடி நிவாரணியாகச் செயல்படக்கூடியது. வெளியே சென்று விட்டு வந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தயிரைப் பூசிக்கொள்ள வேண்டும், இது சூரியனின் தாக்கத்தைக் குறைத்து, கருத்துப் போவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது.
பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட (Get rid of dandruff)
பொடுகைப் போக்குவதற்கு தயிர் எளிய நிவாரணியாகும். வேதிப்பொருள்களைக் கொண்ட பிற தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் எளியது, பாதுகாப்பானது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளதால், பூஞ்சைகளை எதிர்க்கும் பண்பு கொண்டுள்ளது, ஆகவே தயிருடன் வேறெதையும் சேர்க்கவும் தேவையில்லை. தயிரை தலைக்குத் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து தலை குளித்தால் பொடுகு குறையும், தொடர்ந்து செய்துவந்தால் முற்றிலும் பொடுகுத் தொல்லையைப் போக்கவும் வாய்ப்புள்ளது.
மன அழுத்தம், மனக்கலக்கத்தைக் குறைக்க (Release stress and anxiety)
இந்த பரபரப்பான உலகில், மன அழுத்தமும் மனக்கலக்கமும் அன்றாடம் சந்திக்கும் விஷயங்களாகிவிட்டன. தயிர் சாப்பிடுவதால், உணர்ச்சிகளையும் வலியையும் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியின் செயல்பாடு குறைவதாகவும் சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தினமும் சில ஸ்பூன் தயிர் சாப்பிட்டால் மன அழுத்தம் உங்களைப் பாதிக்காமல் காக்கலாம்.
வீட்டிலேயே கிடைக்கும் எளிய தயிரில் இவ்வளவு நன்மைகள் உள்ளதைத் தெரிந்துகொண்டோம்! சருமம் பளபளப்பாகவும், கூந்தல் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கும் தயிர் மிகவும் உதவுகிறது. உள்ளுக்குள் முழுமையான ஆரோக்கியத்திற்கு உதவுவது மட்டுமின்றி, வெளித் தோற்றத்தையும் மேம்படுத்த உதவுகிறது!
Comments
Post a Comment