திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூச திருவிழா







திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாத யாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு பாத யாத்திரையாக வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற ஆடை அணிந்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பாத யாத்திரையாக வருகின்றனர்.


தைப்பூச தினத்தன்று மாலை 5.16 மணியில் இருந்து இரவு 8.50 மணி வரையிலும் சந்திர கிரகணம் ஏற்படுவதால், பூஜை காலங்கள் மாற்றப்பட்டு உள்ளது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.


தைப்பூசத்தை முன்னிட்டு, காலை 8 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, முக்கிய வீதிகளின் வழியாக வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோவிலை சேர்கிறார்.


சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4.15 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை திருக்காப்பிடப்படுகிறது. சந்திர கிரகணம் முடிந்ததும், இரவு 9.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து ராக்கால அபிஷேகம், ராக்கால தீபாராதனை, ஏகாந்தம், பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படுகிறது.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்