கோவில்களில் செய்யப்படும் பொங்கல் வழிபாடுகள்







தமிழகத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் பண்டிகைக்கு எந்த அபிஷேகம் மற்றும் உற்சவம் போன்ற வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம்.


ஆண்டாள் திருமணம் :


புதுச்சேரி அருகே உள்ள நல்லாத்தூர் நாராயணன் ஆலயத்தில் அருளும் ஆண்டாளுக்கு, போகி பண்டிகை நாளில் திருமண விழா நடத்துவார்கள். அன்று ஆண்டாளுக்கு சூட்டிய மாலைகளை, திருமணத்துக்குக் காத்திருப் போருக்கு பிரசாதமாகத் தருவார்கள். இதைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.


சந்திரசேகரர் உலா :


சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் மகரசங் கராந்தியான, பொங்கல் திருநாள் அன்று சந்திரசேகர சுவாமி திருவீதி உலா வருவார். மறுநாள் மாட்டுப் பொங்கல் அன்று, குளக்கரையில் கற்பகாம்பாள் எழுந்தருளி, கன்னி உற்சவம் நடைபெறும். அதற்கு மறுநாள் சந்திரசேகர சுவாமி பரிவேட்டை உற்சவம் மேற்கொள்வார்.


குழந்தைப்பேறு :


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திரு மாகாளம் மகாகாளநாதர் கோவிலில் தை மாதம் முதல் நாள் விசேஷமாக கொண்டாடப்படும். குழந்தைப் பேறு வேண்டிவரும் பக்தர்கள், அன்றைய தினம் இங்குள்ள அம்ச தீர்த்தத்தில் நீராடி மகாகாள நாதரையும், அந்தக் கோவிலில் குழந்தை வடிவில் உள்ள முருகனையும், விநாயகரையும் வழிபாடு செய்வார்கள். இவ்வாறு செய்வதால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


கரும்பு அலங்காரம் :


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு, தைப் பொங்கல் அன்று 5008 கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்வார்கள்.


தேங்காய் நிவேதனம் :


தஞ்சாவூரில் உள்ள பங்காரு காமாட்சி அம்மன் ஆலயத்தில் உற்சவ மூர்த்தியான காமகோடி அம்மன் தை மாதம், காணும் பொங்கல் நாளில் சகல அலங்காரங்களுடன் மண்டபத்தில் கொலுவிருப்பாள். அன்று மட்டும் தேங்காய் நிவேதனம் செய்வதுண்டு. மற்ற நாட்களில் இந்த ஆலயத்தில் தேங்காய் உடைப்பது கிடையாது.


பகல் வழிபாடு :


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அருகே இருக்கிறது பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில். இந்த ஆலயத்தில் திங்கட்கிழமைகளில் மட்டும் நள்ளிரவு 12 மணிக்கு பூஜை நடைபெறும். மற்ற நாட்களில் பூஜை கிடையாது. ஆனால் விதிவிலக்காக தைப் பொங்கல் திருநாள் அன்று மட்டும் பகல் முழுவதிலும் இந்த ஆலயத்தில் பூஜை நடத்தப்படுகிறது.


பெருமாளின் கிரிவலம் :


வேலூர் மாவட்டத்தில் உள்ள துத்திப்பட்டு வரதராஜப் பெருமாள் கோவிலில், காணும் பொங்கல் அன்று, நிமிஷாசல மலையைச் சுற்றி பெருமாள் வலம் வருகிறார். இந்த மலையில் ரோம ரிஷி என்ற முனிவர் இன்னும் வாழ்ந்து வருவதாக ஐதீகம் உள்ளது. அவருக்கு காட்சி கொடுப்பதற்காகவே, இந்தப் பெருமாள் காணும் பொங்கலன்று மலையை வலம் வருகிறாராம்.


போர்வை வைபவம் :


நவ திருப்பதிகளில் முதல் தலமான ஸ்ரீவைகுண்டத்தில் பொங்கல் தினத்தன்று, கள்ளபிரானுக்கு 108 போர்வைகள் போர்த்தி அலங்கரிப்பார்கள். பெருமாள் கொடி மரத்தை வலம் வந்த பின், ஒவ்வொரு போர்வையாக அகற்றி அலங்காரத்தை கலைப்பார்கள். இது 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களையும், கள்ளபிரான் வடிவில் தரிசிப்பதற்கான ஐதீகமாக பார்க்கப்படுகிறது.


பரிவேட்டை உற்சவம் :


பொங்கல் திருநாளுக்கு மறுதினம் காஞ்சி அருகே உள்ள பழைய சீவரத்தில் பரிவேட்டை உற்சவம் நடைபெறும். அன்றைய தினம் ஆற்றங்கரைக்கு காஞ்சி வரதர் வருவார். அங்கு அவருடன் பழைய சீவரம் லட்சுமி நரசிம்மர், காவாத் தண்டலம் கரிய மாணிக்கப்பெருமாள், சாலவாக்கம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மற்றும் திருமுக்கூடல் அப்பர் வேங்கடேசப் பெருமாள் ஆகியோர் ஒரு சேர வருவார்கள்.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்