பெண் உருவில் இருக்கும் அதிசய பிள்ளையார் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?
இந்த உலகில் ஆண் வடிவிலும், பெண் வடிவிலும் பல தெய்வங்களை நாம் வணங்கி வருகிறோம். அந்தவகையில், பிள்ளையாரை ஆண் தெய்வமாக தான் இதுவரை வழிபட்டு வருகிறோம். ஆனால் பிள்ளையாரை பெண் தெய்வமாக வழிபடும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது அது பற்றி இப்போது பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள தூணில் பெண் உருவம் கொண்ட விநாயகரைக் காணலாம்.
பெண் வடிவத்தில் உள்ள பிள்ளையார் விக்னேஷ்வரி, விநாயகி, கணேஷினி, கணேஷ்வரி எனப் பல பெயர்களில் வணங்கப்படுகிறார்.
இக்கோயில் நாகர்கோவில் - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாணுமாலயன் என்ற இக்கோயிலின் பெயரே மும்மூர்த்திகளின் பெயரை உள்ளடக்கியிருக்கிறது. தாணு என்பது சிவபெருமானையும், மால என்பது பெருமாள் விஷ்ணுவையும், அயன் என்பது பிரம்மாவையும் குறிக்கிறது.
17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலானது கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. குறிப்பாக தீக்குமொன் மடம் என்ற நம்பூதிரி குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இக்கோவிலை நிர்வகித்து வந்திருக்கின்றனர். இந்தக் கோவிலின் மூலவராக மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் இணைந்து ஒரே ரூபமாக தாணுமாலயனாக அருள்பாலிக்கின்றனர். இப்படி மும்மூர்த்திகளையும் ஒரே ரூபமாக பார்ப்பது அரிதிலும் அரிதானதாகும்.
பெண்ணுக்குரிய ஆபரணங்களோடு ஒரு காலை ஊன்றியும் மறுகாலை மடக்கியும், புடவையோடு அற்புத பெண் தெய்வமாக காட்சி தருகிறாள் கணேஷினி. இங்குள்ள அலங்கார மண்டபத் தூணில் உள்ள விநாயகியை, 8 அமாவாசை தினங்கள் தீபம் ஏற்றி வழிபட்டால், பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும் என்று கூறப்படுகிறது.
தாணுமாலயன் கோவிலில் ஒரே கல்லினால் செய்யப்பட்ட 5.5 மீட்டர் உயரமுள்ள நான்கு மிகப்பெரிய இசைத்தூண்கள் இருக்கின்றன. அலங்கார மண்டபம் என்ற பகுதியில் இருக்கும் இந்த இசைத்தூண்களை தட்டினால் சப்தசுவரங்களில் இசை வெளிப்படுவது பிரமிப்பின் உச்சம்.
மேலும், இக்கோயிலில் தான் 22 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13அடி உயரமும், 21அடி அகலமும் கொண்ட நந்தி சிலையும் இருக்கின்றன. இந்த நந்தி சிலை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
Comments
Post a Comment