இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம்
இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளில்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகின்றது.
இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்டவராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம்.
இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கி இருப்பார். கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள்.
Comments
Post a Comment