தேவவருடத்தின் தொடக்கம் தை மாதம்
தைத்திருநாள் என்பது தேவவருடத்தின் ஒரு நாளின் தொடக்கம். அதாவது, சூரியனின் காலைப்பொழுது என்ற அறிவியல் புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கின்ற தை முதல் ஆனி வரையிலான காலம் உத்ராயணம் என்று அழைக்கப்படுகிறது. இது தான் தேவவருடத்தின் ஒரு நாளின் பகல் பொழுது. இதேப்போல சூரியன் தெற்கு நோக்கி சஞ்சரிக்கின்ற ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான காலம் தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் தேவ வருடத்தின் இரவுப் பொழுது. இவ்வாறாக சூரியனின் சுழற்சியின் அடிப்படையிலான தேவவருடத்தின் ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம் ஆகும்.
ஒரு ஒளி ஆண்டில் பயணிக்கின்ற ஒருவன் 10 நாட்கள் கழித்து இந்த பூமிக்கு திரும்ப வரும்போது இங்கு பத்து வருடங்களுக்கு மேல் கடந்திருக்கும் என்று ஆராய்ந்து சொல்கிறது, இன்றைய அறிவியல். இதை அடிப்படையாக கொண்டு ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. நமது, வேதங்கள், நமது தமிழ் ஆகமங்கள் சொல்லிவைத்துவிட்டு போன அறிவியல் கருத்துகளை எடுத்து சொன்னால், உதாசீனப்படுத்துவது நம்மிடையே புரையோடிப்போன ஒரு பழக்கம்.
தேவர்களின் ஒரு நாளில் பிரம்மமுகூர்த்தம் என்று அழைக்கப்படக்கூடிய விடியல் பொழுது (காலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தான் நமக்கு (பூமிக்கு) மார்கழி மாதம். அதிகாலையில் நமது பண்பாட்டில் இறைவனுக்கான இசை என்பது நீக்கமற நிறைந்த ஒன்று. அதனால் அந்த மாதத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பூமியில் எப்படி காலை 6 மணிக்கு சூரிய உதயத்துடன் ஒரு நாள் தொடங்குகிறதோ, அதே போல தேவ வருடத்தின் ஒரு நாளின் தொடக்கம் என்பது தை மாதமாக இருக்கிறது. அதனால் தான் அதை நம் தமிழர் பண்பாடு பொங்கல் விழாவாக எடுத்து சூரியனை கொண்டாடுகிறது. ஆகவே, தைத்திருநாள் என்பது வெறும் அறுவடை நாள் மட்டுமல்ல. அது தேவவருடத்தின் ஒரு நாளின் தொடக்கம். அதாவது, சூரியனின் காலைப்பொழுது என்ற அறிவியல் புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
Comments
Post a Comment