புராண கதாபாத்திரங்கள்







புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பல வகையான கதாபாத்திரங்கள் உள்ளன. அந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் கதையின் போக்குக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுவதாகவும், வலுசேர்ப்பதாகவும் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட புராண, இதிகார கதாபாத்திரங்கள் பற்றிய தகவலை இந்தப்பகுதியில் பார்க்கலாம்.


அபிமன்யு


மகாபாரதம் என்னும் புகழ்பெற்ற இதிகாசத்தில் முக்கியமான கதாபாத்திரமாக திகழ்பவன் அர்ச்சுனன். இவனது வீரப்புதல்வன் தான் அபிமன்யு. குருஷேத்திரப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் பாண்டவர்களுக்கு ஆதரவாக அபிமன்யுவும் பங்கேற்றான். கவுரவர்களின் படைத்தளபதி துரோணர் பாண்டவர்களை அழிப்பதற்காக சக்கரவியூகம் அமைத்தார். வலுமிகுந்த அந்த சக்கரவியூகத்தை உடைத்து உடைபுகும் வித்தையை கண்ணன், அபிமன்யுவுக்கு கற்றுக்கொடுத்திருந்தார். அதைப்பயன்படுத்தி சக்கரவியூகத்தை உடைத்த அபிமன்யு கடுமையாக போர் செய்தான். அதே நேரம் சக்கரவியூகத்தை உடைத்து வெளியேறும் வித்தையை அவன் அறியாத காரணத்தால், போரில் வீரமரணம் அடைந்தான். மகாபாரதத்தின் குருஷேத்திரப் போரில் அபிமன்யுவின் வீரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


பீஷ்மர்


அளவில்லாத சக்திகளைப் பெற்ற மாவீரன், பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் பிதாமகராக விளங்கிய பீஷ்மர். இவர் சாந்தனு என்ற அரசனுக்கும் கங்கை தேவிக்கும் பிறந்தவர். தன் தந்தையின் ஆசைக்காக வாழ்நாள் முழுவதும் மணம் முடிக்காமல் பிரம்மச்சாரியாக விரதம் மேற்கொள்வேன் என்று சபதம் மேற்கொண்டு, அதனை நிறைவேற்றியவர். காலச் சூழ்நிலையின் காரணமாக மகாபாரதப் போரில் கவுரவர்களின் படைகளுக்கு முதல் பத்து நாட்கள் தலைமை தாங்கி வழி நடத்தினார். 10-ம் நாளில் அர்ச்சுனனின் அம்பால் வீழ்த்தப்பட்டார். ‘விரும்பும் போது உயிர் பிரியும்’ என்ற வரத்தை பீஷ்மர் பெற்றிருந்ததால், அவர் உயிர் பிரியும் வரை, ஒரு அம்புப் படுக்கையை உருவாக்கி அதில் அவரை படுக்க வைத்திருந்தான், அர்ச்சுனன்.


அஸ்வத்தாமா


பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் கல்வி, போர் திறன் களைக் கற்றுக்கொடுத்த குரு, துரோணாச்சாரியார். அவரது மகன் தான் அஸ்வத்தாமா. இவன் ஏழு சிரஞ்சீவிகளில் ஒருவன் ஆவான். பிறந்த பொழுது இவனது அழுகை, குதிரையின் குரலை போன்று இருந்தது. அதன் காரணமாக ‘அஸ்வத்தாமா’ என்று பெயர் பெற்றான். குதிரையின் வலிமையைப் பெற்றவன் என்பதாலும் இந்தப் பெயர் வந்ததாக ஒரு சாரார் சொல்வார்கள். கவுரவர்களுக்காக போர்க்களத்தில் ஒரு பகுதி படைக்கு தலைமை தாங்கி போரிட்டவன் அஸ்வத்தாமா. அவன் போரில் இறந்ததாக துரோணாச்சாரியாரை நம்ப வைத்து, அவரை பாண்டவர்கள் கொன்றனர். அதற்கு பழிவாங்கும் விதமாக திரவுபதியின் ஐந்து மகன்களையும் அஸ்வத்தாமா கொன்றான்.


ஐராவதம்


பெருமதிப்பு பெற்ற ஐராவதம் ஒரு யானையாகும். வெள்ளை நிறம் கொண்ட இந்த யானையானது, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்டது. அதனை தேவர்களின் அரசனான இந்திரன் தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டான். ஐராவதம் யானை நான்கு தந்தங்களையும், ஏழு துதிக்கை களையும் கொண்டது.


அகத்தியர்


கும்பத்தில் இருந்து தோன்றியவர் அகத்தியர். குறுகிய வடிவம் கொண்டவர். அதனால் இவர் ‘குறுமுனி’ என்றும் அழைக்கப்படுகிறார். பாரதம் எங்கும் பயணம் செய்து தனது தவத்தின் வலிமையால், அவர் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ஈசனிடம் இருந்து தமிழ் மொழியை அறிந்து கொண்டு, தமிழுக்கு இலக்கணம் அமைத்தவர் அகத்தியப் பெருமான். இதனால் அவர் தமிழ் இலக்கணத்தின் தந்தை என்று அறியப்படுகிறார். விந்திய மலைத் தொடரை வில்லாக வளைத்துக் காட்டிய ஆற்றல் மிகுந்தவர். குறுமுனியாக இருந்தாலும், கடலுக்கடியில் மறைந் திருந்த அசுரர்களை வெளிக்கொண்டு வருவதற்காக, கடல்நீர் முழுவதையும் குடித்து தனக்குள் அடக்கியவர். வேதம், ஜோதிடம், ஆயுர்வேதம் போன்றவற்றில் பெரும் பங்காற்றிய இவர், சித்த மருத்துவத்தில் முதன்மையானவராக அறியப் படுகிறார்.


அட்சய பாத்திரம்


இல்லை என்று சொல்லாமல் அளித்துக் கொண்டே இருப்பதற்கு ‘அட்சய பாத்திரம்’ என்று பொருள். பசி என்று வருவோருக்கு இல்லை என்ற சொல்லுக்கு இடமில்லாமல் வயிறு நிறைய உணவு வழங்குவதற்கு வழிவகை செய்யும் ஒரு பாத்திரம். தம்மை நாடிவரும் உயிர்களுக்கு தங்கு தடையின்றி உணவு வழங்க வேண்டும் என்று பாண்டவர்கள் விரும்பினர். அதனால் பாண்டவர்களின் மூத்தவரான தர்மர், சூரிய பகவானிடம் வேண்டிப் பெற்றதே அட்சய பாத்திரம். பாண்டவர்கள் வனத்தில் மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நேரத்தில், உணவுகளைப் பெறுவதற்காக சூரியபகவான் தர்மருக்கு இந்த அட்சய பாத்திரத்தை வழங்கியதாகவும் ஒரு கதை உண்டு. இது ஒரு அள்ள அள்ள குறையாத அமுத சுரபி.


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்