இதையெல்லாம் சாப்பிட்டால் உணவும் விஷமாகும்!
லட்சோப லட்ச வருடங்களை கடந்து மனித இனமாக இந்த உலகில் வாழ்ந்து வருகின்றோம். எத்தனையோ நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனாலும் வாழ்வியலின் அடிப்படை தேவையான ‘உணவு’ என்ற விடயத்தில் நாம் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்றே எண்ணம் எழுகிறது. சரிவிகித உணவு முறை என்பது நம்மில் பலரிடமும் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பதே இதற்கு சான்று. வாழையிலை என்பதை விழாக்காலங்களில் மட்டுமே பார்க்கிறோம். எந்த உணவையாவது சாப்பிட்டுவிட்டு Food Poisoning ஆகிவிடுகிறது. சரியான உணவுமுறை, இதை சாப்பிட்டால் இதை சாப்பிடக் கூடாது என்ற அறிவுரைகள் எல்லாம் நம் தாத்தா-பாட்டியோடு சென்றுவிட்டது.
ஆனால் கும்பகோணம் அரசினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் ஒரு அறிவுரைப் பலகை ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதில் “உணவும் நஞ்சாகும்” என்ற தலைப்பின் கீழ் எந்த வகை உணவுகளை சாப்பிட்டால் எந்த உணவை சாப்பிடக் கூடாது என்ற அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன.
அதில் இடம்பெற்றுள்ள உணவியல் அறிவுரைகள்:
மீன் சாப்பிட்டால் பால், புளிப்புச்சுவை கொண்ட பழங்கள், கீரைகளை சாப்பிடக் கூடாது.
கோழி இறைச்சி அல்லது மாமிசம் உட்கொள்ளும்போது அதனுடன் தயிர் கலக்கக்கூடாது.
அதேபோல தயிருடன் வாழைப்பழம் சேர்க்கக் கூடாது.
முள்ளங்கியுடன் உளுந்தம்பருப்பு சேர்க்கக் கூடாது.
வெற்றிலை போட்டப் பின் எண்ணெய் பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.
கொத்துப்பசலைக் கீரையுடன் எள் சேர்த்து சமைக்கக் கூடாது.
தேன் – நெய் – எண்ணெய் – நீர் இவைகளை ஒன்றோடொன்று கலக்கக் கூடாது.
மீன் இறைச்சி பொறித்த எண்ணெய் அல்லது நெய்யை மீண்டும் உபயோகிக்க கூடாது.
கரும்பு தின்றவுடன் தண்ணீர் அருந்தக் கூடாது.
உணவு உண்ட அடுத்த 1 மணி நேரத்தில், நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாடுதல் போன்றவற்றில் உடல் உழைப்பை செலுத்த வேண்டும்.
இரவில் கீரைகளை உண்டால் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இந்த அறிவுரைகளை மிக அழகாக எழுத்தாக்கம் செய்து மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள். அதை நாங்கள் உங்களுக்கு இணையதளம் மூலமாக கொண்டு சேர்த்துள்ளோம். வாழ்வியலை மிக முக்கியமான கடமையாக கருதும் நாட்டில் பிறந்த நாம் நமது உணவியலையும் பின்பற்றிடும் கடமையோடு மற்றவர்களுக்கும் இச்செய்தியை பகிர்ந்திடுவோம்
Comments
Post a Comment