கௌதம புத்தரின் வாழ்வும், போதனைகளும்
"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர். பௌத்த மதம் என்னும் சமயத்தை தோற்றுவித்து மக்கள் யாவரும் முக்தி அடைய ஒரு எளிதான வழியைக் காட்டியவர்.புத்தரின் போதனைகளைப் பின்பற்றுவோர் பௌத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அனைவருமே கௌதம புத்தர் அவதரித்த நாளைக் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு மே 19-ம் தேதி (திங்கட்கிழமை ) அன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
புத்தரின் பிறப்பு :கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினிக் கிராமத்தில் கி.மு. 566-ல் சாக்கிய குலத்தில் பிறந்தார் கௌதம புத்தர். பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர். தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர்,கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய ரும்மிந்தைத் தூண் சின்னத்தால் பிரசித்திப் பெற்று விளங்குகிறது.புத்தர் பிறந்த ஏழாவது நாளில் சுத்தோதனர் இயற்கை எய்தினார். பின்னர் புத்தர் தன் அத்தையான பிரஜூபதி கௌதமியால் வளர்க்கப்பட்டார். இளமைப் பருவத்தில் யசோதரா என்னும் மங்கையை மணந்து இல்லற வாழ்க்கையை நடத்தினார். இவருக்கு ராகுல் என்ற மகன் பிறந்தான்.சில காலங்களுக்கு பிறகு புத்தருக்கு அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும்,நோயாளி ஒருவரையும்,பிணம் ஒன்றையும்,துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது.
Comments
Post a Comment