சமூகத்தை சீர்குலைக்கும் சாராஹ் ஆப்… ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஃபேஸ்புக், ட்விட்டர் என அங்கு பார்த்தாலும் Sarahah என வண்ணமயமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது ஒரு ஸ்டேடஸ் செயலி. வலைதளங்களில் நம்முடன் இணைந்துள்ள மனிதர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அவரது முகம் தெரியாமல் அறிந்துகொள்ள வழிவகை செய்கிறது இந்த செயலி. எளிமையாக சொன்னால் இது ஒரு ஆண்-லைன் மொட்டை கடுதாசி சிஸ்டம் பாஸ்.

எப்படி செயல்படுகிறது?

ஆழ்மனதில் தேங்கியுள்ள வக்கிரங்களுக்கு சுதந்திரம் கொடுத்து மனசை துடைத்து தூர் வாரும் இந்த செயலி, ஆண்ட்ராய்ட் மட்டுமின்றி IOS இயங்குதளத்திலும் கிடைக்கிறது. அந்த செயலியில் உங்களது கணக்கை துவங்கி, உங்களுக்கான URL முகவரியை ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் ட்வீட்டி விட்டால் போதும், உங்களது முகமறியாத நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அந்த செயலிக்குள் இருக்கும் Inboxக்கு அனுப்பி வைப்பார்கள்.

இன்னும் விசேசம் என்னவென்றால், உங்களது முகவரிக்கு யார் வேண்டுமானாலும் லாக்-இன் செய்யாமலேயே கருத்து தெரிவிக்கலாம், பாராட்டலாம், விமர்சிக்கலாம், நாக்கை பிடுங்கிக்கொள்ளும் அளவுக்கு கேள்வி கேட்கலாம், கழுவியும் ஊற்றலாம். இப்படி உங்களிடம் தெரிவிக்க வேண்டிய எதையும் அவர்கள் அங்கே தைரியமாக வெளிப்படுத்த முடியும். ஆனால் அவர்களின் பெயரோ அல்லது முகவரியோ உங்களுக்கு தெரியாது என்பதுதான் உச்சக்கட்ட பாவம்.

சாராஹ்வின் பிறப்பிடம்:

இந்த செயலி சவூதி அரேபியாவில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோருக்காக உருவாக்கப்பட்டது ஆகும். இதை வடிவமைத்தவர் டாஃபிக் என்ற செயலி உருவாக்க மற்றும் கட்டமைப்பாளர். அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்களது குறைகளை தயக்கமின்றி நிர்வாகத்திடம் கொண்டுசெல்ல ஏதுவாகவே இந்த செயலி உருவாக்கப்பட்டது. அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கா, லண்டன் வரை வைரலாகிய இந்த செயலி தற்போது இந்தியாவிற்குள் காலடி எடுத்துவைத்து வெற்றியடைந்துள்ளது. உலகில் யாருக்கு உதவியதோ, எப்படி உதவியதோ, ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒவ்வொரு நெட்டிசனுக்கும் மிக மிக உதவிக் கொண்டிருக்கிறது இந்த சாராஹ்.

உங்களுக்கு சகிப்புத் தன்மை இருக்கிறதா?

இந்த செயலியின் மூலம் அனுப்பியவர் விவரம் இல்லாமல் உங்களுக்கு கிடைக்கக் கூடிய செய்திகள் உங்களது தூக்கத்தை பாதிக்கிறது என்றும் உங்களது மன அமைதியை சீர்குலைக்கிறது என்றும் வல்லுனர்கள் கூறி தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. எவ்வித சகிப்புத் தன்மையையும் இழந்து நிற்கும் இந்த சமூகத்தினருக்கு, யாரேனும் அடையாளம் இல்லாமல் வந்து காதலை வெளிப்படுத்துவது, திட்டுவது, விமர்சிப்பது என்று செய்தால் எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்? எப்படியோ ஒருவரது நெஞ்சில் ஆழ மூழ்கியுள்ள வக்கிரத்தையும், வஞ்சத்தையும் கிளீன் செய்து விடுகிறது என்று யோசிப்பவர்களை தவிர வேறு யாரும் இந்த செயலியை டவுன்லோட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இந்த செயலியானது சிறுவர்கள் உள்பட அனைத்து தரப்பு பயனாளிகளையும் மனதளவில் பாதிப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

டீனேஜர்களுக்கு ஆபத்து:

சமூக ஊடகங்களில் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் குடியேறியுள்ள நிலையில், இது போன்ற செயலிகள் மற்றும் அதன் தாக்கங்கள் நிச்சயமாக எல்லோரையும் வந்தடையும். சகிப்புத் தன்மைக்கு புடம் போடும் விதமாக வெளியேறும் இம்மாதிரியான செயலிகள் குறிப்பாக விவரமறியாத சிறுவர்களுக்கும், டீனேஜர்களுக்கும் உளவியல் ரீதியான மாற்றங்களை தருகின்றன என்று வல்லுனர்கள் விவரிக்கின்றனர். இன்னும் விவரமாக சொன்னால், மனிதர்களுக்கு புதிய டாஸ்க்குகளை கொடுத்து, அதன் மூலம் கவர்ந்து, அவர்களை செயலியல் அல்லது உளவியல் ரீதியாக அடிமையாக்குவதுதான் கிரியேட்டர்களின் நோக்கமாக இருக்கிறது என்று சொல்லலாம். சமீபத்தில் ‘ப்ளூ வேஹ்ல்’ என்ற செயலி உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறுவர்களை தற்கொலைக்கு ஆளாக்கியுள்ளது. இந்தியாவில் மும்பையில் வாசித்த ஒரு சிறுவனும் இந்த கேம்மிற்கு அடிமையாகி இறுதியில் தன்னுடைய உயிரை பறிகொடுத்தான். முழுவிவரம் இங்கே – ஆளைக் கொல்லும் ஆன்லைன் கேம்…!

சமூக பாதிப்பு:

நாட்டின் ஒற்றுமை என்பது அதனுள் வாழும் சமூகங்களின் நல்லிணக்க புள்ளியில் இருந்து தொடங்குகிறது என்று சொல்வார்கள். அதற்குள்தான் நாம் வாழ்கிறோம். அன்றும் சரி இன்றும் சரி; அடிப்படையாகவே நமது மனம் ஒற்றுமையை நோக்கி வரையப்பட்ட கோடாகத்தான் இருக்கிறது. பிறர் மீது வஞ்சம், பழியுணர்வு, கோபம் இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் தருணத்திற்காக காத்திருப்பார்கள். அல்லது அந்த தருணத்தை உருவாக்கும் உத்தியை வகுத்திருப்பார்கள். தனது எதிரி இன்னவர் என்று தெரிந்திருக்கும். ஆனால் சாராஹ் போன்ற செயலிகளால் தன்னைப் பற்றி ஒரு விமர்சனத்தையோ அல்லது கடுமையான சொற்களையோ பெறுபவர், அது யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள துளியும் வாய்ப்பில்லை. நம்மை சுற்றியுள்ளவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று அறிந்துகொள்ளவும் கூட வாய்ப்பில்லை. முகவரி இல்லாமல் வந்தடையும் இந்த விமர்சனங்களால் உங்கள் தூக்கம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மனநிலையுமே கெடுகிறது. உங்களுக்கும் உங்கள் சுற்றத்துக்கும் இடையேயான நெருக்கம் குறைகிறது. சமூக ஊடகங்கள் மீது நடைபெறும் உங்களுடைய நகர்வுகள் அதிருப்தியை சந்திக்கின்றன.

கோரமான முகமூடிகள்:

நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் கோரமான முகமூடிதான் இந்த சாராஹ் செயலி. ஒவ்வொருவருக்கும் முகமூடி வழங்கபட்டால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரையும் எப்படி வேண்டுமானலும் தாக்கலாம். எதிரிகளை நேருக்கு நேராக சந்திக்காமல், அவர்களின் புறமுதுகில் தாக்குதல் நிகழ்த்த கற்றுக்கொடுக்கிறது இந்த செயலி. மற்றவர் மீதுள்ள வன்மம், பழி வாங்கும் உணர்வுகளை வெளிப்படுத்த இது போன்ற செயலிகள் உதவுவதால், மனதில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடுகின்றன என்று நியாயம் பேசலாம். ஆனால் இது உங்களை முழுக்க முழுக்க கோழையாக மாற்றுகிறது. அடுத்தடுத்த எதிரிகளை சந்திக்க நீங்கள் ஒவ்வொரு முகமூடியை அணிய வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்