கோவில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்?
கோவில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோவில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்?
அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்' என்ற பிரணவ மந்திர ஒலியோடு நாதம் சிறிது சிறிதாகத் தேய்வதை நாம் உணரலாம். "ஓம்' என்ற ஓங்கார ஒலியின் சத்தத்தை எழுப்பி, நம் மனத்துக்குள் நிறைவதால், நாம் மணியை ஒலிக்கச் செய்கிறோம். இறைவன் நாத வடிவமானவன் என்பர். அந்த வடிவத்தின் வெளிப்பாடே அகாரம் உகாரம் மகாரம் சேர்ந்த, அதாவது அ, உ, ம மூன்றின் கலவையான ஓம் என்பது. ஓம் ஒலியானது நம் மனத்தினுள் மோதும்போதே அதன் அதிர்வலைகள் நம் உள்ளத்தில் ஒருவித நேர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்து, நல்ல சகுனத்தைக் கூட்டுகிறது. நன் நிமித்தத்தை வெளிப்படுத்துகிறது.
நாம் கோயில்களில் பூஜா காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும் ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.
Comments
Post a Comment