எந்த ராசிக்கு எந்த கோயில்
பன்னிரண்டு ராசியினரும் தரிசிக்க வேண்டிய அதிர்ஷ்டக்கோயில், வழிபாடு முறைகள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
மேஷம்
சஷ்டி திதி அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தன்று திருச்செந்துார் முருகனை தரிசியுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யுங்கள். தொழிலில் வருமானம் பன்மடங்கு உயரும்.
ரிஷபம்
திருவாதிரை நட்சத்திரத்தன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதரை வழிபடுங்கள். திருமணத்திற்கு பொருளுதவி செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
மிதுனம்
பூர நட்சத்திரத்தன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டைக்கு அருகிலுள்ள பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். முதியோருக்கு உதவிட விருப்பம் நிறைவேறும்.
கடகம்
திங்கட்கிழமை அல்லது பூரம் நட்சத்திரத்தன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வழிபடுங்கள். மனதில் மகிழ்ச்சி நிலைக்க திருமாங்கல்யம் வாங்க பணஉதவி செய்யுங்கள்.
சிம்மம்
சுவாதி நட்சத்திரத்தன்று சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரியிலுள்ள குருராஜரான ராகவேந்திரரை வணங்குங்கள். தொழு நோயாளிக்கு உதவி செய்ய நிம்மதி கிடைக்கும்.
கன்னி
சதயம் நட்சத்திரத்தன்று திண்டிவனம் அருகிலுள்ள திருவக்கரையில் கோயில் கொண்டிருக்கும் வக்ரகாளிஅம்மனை வழிபடுங்கள். ஏழைக்கு பொருளுதவி செய்யுங்கள். தடை நீங்கி முயற்சி நிறைவேறும்.
துலாம்
ரேவதி நட்சத்திரத்தன்று விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோயிலிலுள்ள ஆழத்துவிநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் நல்ல திருப்பம் உருவாகும்.
விருச்சிகம்
அசுவினி நட்சத்திரத்தன்று மருதமலையில் பாம்பாட்டி சித்தர், முருகன் சன்னதியில் தீபமேற்றி வழிபடுங்கள். விதவைப் பெண்ணுக்கு உதவுங்கள். வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
தனுசு
ஞாயிறு அல்லது உத்திர நட்சத்திரத்தன்று கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனத்தில் அருள்புரியும் சரபேஸ்வரரை வழிபடுங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். குழப்பம் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும்.
மகரம்
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பூவராகவப் பெருமாளை உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தரிசியுங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவினால் வாழ்வு பிரகாசமாகும்.
கும்பம்
திருச்சி சமயபுரத்தில் அருள்பாலிக்கும் மாரியம்மனை, பரணி நட்சத்திரத்தன்று மாவிளக்கேற்றி வணங்குங்கள். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு உதவுங்கள். செல்வம் கொழிக்கும்.
மீனம்
திருவண்ணாமலை அண்ணாமலையாரை பவுர்ணமி திதி அல்லது மகம் நட்சத்திரத்தன்று கிரிவலம் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.
Comments
Post a Comment