கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வயதானவர்கள் என்ன செய்யலாம்; எதை செய்யக்கூடாது - மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை
கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வயதானவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
புதுடெல்லி,
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது.
நாம் ஒவ்வொருவரும் இந்த உத்தரவுகளை கடைபிடிப்பதும், தேவையான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் முக்கியம்.
இந்நிலையில் வயதானவர்களுக்கு இந்த வைரசால் அதிக ஆபத்து இருப்பதால் அவர்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அவர்களது உடல்நிலை, நோய் எதிர்ப்புசக்தி குறைவு, நீரிழிவு, உயர் அழுத்தம், சிறுநீரக நோய்கள், நாள்பட்ட நுரையீரல் நோய் போன்ற பல்வேறு நோய்கள் காரணமாக இந்த ஆபத்து அவர்களுக்கு அதிகமாக உள்ளது.
மேலும் வயதானவர்களுக்கு நோயின் தன்மையும் கடுமையாக இருக்கும், இதனால் இறப்புக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும்.
என்ன செய்யலாம்
* ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து கைகளையும், முகத்தையும் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
* வீட்டில் பார்வையாளர்களை சந்திப்பதை தவிர்க்க வேண்டும். கட்டாயம் சந்திக்க வேண்டுமென்றால் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி விடவேண்டும்.
* வீட்டில் சமைத்த புதிய, சூடான, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
* கண்புரை நீக்குதல், மூட்டு மாற்று போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு திட்டமிட்டு இருந்தால் தள்ளிவைக்கலாம்.
* தினமும் உடற்பயிற்சியும், சரியான மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* அடிக்கடி தொடும் இடங்களை கிருமிநாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
* காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் ஏற்பட்டால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.
செய்யக் கூடாதவை
* வெறும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு இருமுவதோ, தும்முவதோ கூடாது.
* காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்லக் கூடாது.
* சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளவோ, ஆஸ்பத்திரிகளுக்கு வழக்கமான பரிசோதனைகளுக்கோ செல்லக் கூடாது. தேவைப்பட்டால் டாக்டருடன் தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம்.
* பூங்கா, மார்க்கெட், மதம் சார்ந்த இடங்கள் போன்ற கூட்டமான இடங்களுக்கு செல்லக் கூடாது.
* அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்லக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment