மகாசிவராத்திரி மகத்துவம் என்ன ?







ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மகாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மகாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இதற்கு ஈஷா யோகா மைய சத்குரு விளக்கம்:-


மகாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மகாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.


அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர் கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். ஈஷாவிலும் இந்நாள், இதே காரணத்திற்காக அதிக முக்கியத்துவம் பெறுகிறது.


மகாசிவராத்திரி அனைவருக்குமே உகந்த நாள். என்றாலும், யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ‘ஷிவா’ என்றால் ‘எது இல்லையோ, அது’. உங்களில் ‘நான்’ என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நீங்கள் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும்.


இதை நோக்கியே நம் ஈஷா யோகா மையத்தின் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள் அமைகின்றன. இன்னும் சொல்லப்போனால், ஈஷா யோக மையத்தை பொருத்தவரை, ஒவ்வொரு வருடமுமே, மகா சிவராத்திரியை எதிர்பார்த்து, எதிர்நோக்கி காத்திருப்பது போலாகி விட்டது. இந்நாள், இந்த இரவு, ஒரு வாய்ப்பு. நம் உள்வாங்கும் திறனை சிறிதளவேனும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. எண்ணங்கள், உணர்வுகள், முன்முடிவுகள் போன்றவற்றின் இடையூறின்றி வாழ்வை அணுகுவதற்கான வாய்ப்பு.


வெறும் கண்விழித் திருக்கும் ஒருநாளாக இல்லா மல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசையும் அருளும். ‘ஷிவா’ எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் எல்லோரும் உணர்வீர்களாக!


Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

இரவில் தூங்கும்போது சொல்ல வேண்டிய மந்திரம்