கோடையில் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லவைக்கும் ஜூஸ்கள்!
மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் மிகவும் பொதுவான வயிற்றுப் பிரச்சனைகளுள் ஒன்றாகும். இது ஒழுங்கற்ற குடலியக்கத்தால், வயிற்றில் செரிமான பிரச்சனைகளை தூண்டுவதால் ஏற்படுகிறது. நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டால், நீங்கள் கழிக்கும் மலம் இறுக்கமடைந்து கடப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும். மலச்சிக்கலின் மிகவும் பொதுவான அறிகுறிகள் குறைவான குடல் அசைவுகள், மலத்தைக் கடப்பதில் சிக்கல், வயிற்று வீக்கம் மற்றும் அடிவயிற்று வலி ஆகியவையாகும்.
இத்தகைய மலச்சிக்கலை ஒருசில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் திறம்பட தடுக்கலாம். அதுவும் கோடைக்காலத்தில் ஏராளமானோர் மலச்சிக்கலை அனுபவிப்பார்கள். மலச்சிக்கல் ஏற்பட்டால், அது மிகவும் அசௌகரியத்தையும், சங்கடத்தையும் உண்டாக்கும்.
இறுக்கமடைந்த மலத்தை இளகச் செய்வதற்கு பானங்கள் பெரிதும் உதவி புரியும். கீழே குடலியக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுவிக்க உதவும் சில பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த பானங்களை கோடைக்காலத்தில் குடித்து வந்தால், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
குடலியக்கத்திற்கான ஆரோக்கிய பானங்கள்
நீங்கள் சந்திக்கும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு பானங்களின் மூலம் சரிசெய்ய முடிவெடுத்திருந்தால், சிறு அளவிலான பானம் கூட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்திருக்க வேண்டும். சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கு, பெரியவர்கள் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு முறை பாதி முதல் ஒரு டம்ளர் பானத்தைக் குடிக்க வேண்டும். குறிப்பாக காலையில் குடிக்க வேண்டும் என பல வல்லுநர்கள் பரிந்துரைந்துரைக்கின்றனர். குடலியக்கம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் தினமும் குறைந்தது 7-8 டம்ளர் நன்மை பயக்கும் ஏதேனும் பானத்தைக் குடிப்பதை குறிக்கோளாக கொள்ள வேண்டும். கீழே குடலியக்கத்தை மேம்படுத்தும் சில ஆரோக்கியமான பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தர்பூசணி ஜூஸ்
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதோடு இது கோடையில் சாப்பிட ஏற்ற ஒரு குளிர்ச்சியான பழமும் கூட. இந்த பழம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்திருந்து, குடலியக்கத்தை மேம்படுத்தும். அதிலும் தர்பூசணியைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும் மற்றும் இது மெட்டபாலிசத்திற்கும் நல்லது. அதோடு இது வயிற்றை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
தர்பூசணியைப் போன்றே வெள்ளரிக்காயிலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதுவும் குடலியக்கத்தை சீராக்க உதவும். இது கலோரி குறைவான காய்கறி என்பதால் இது வயிற்றை லேசாகவே பாதிக்கும் மற்றும் இது ஒரு இயற்கையான மலமிளக்கியும் கூட. வெள்ளரிக்காய் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும் மற்றும் மலத்தின் நிலைத்தன்மையை பராமரித்து, மலச்சிக்கலைத் தடுக்கும் மற்றும் சிகிச்சை அளிக்கும். வெள்ளரிக்காய் ஜூஸ் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை ஜூஸ்
காலை உணவின் போது பீட்ரூட் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. இது பசியைக் கட்டுப்படுத்தி, வயிற்றை நிரப்புவதோடு, குடலியக்கத்தின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும். மேலும் இது சர்க்கரை மற்றும் கலோரிகள் இல்லாமல், உடலின் எரிபொருளை நிரப்புகிறது மற்றும் உடலுக்கு இயற்கையாகவே ஆற்றலை அளிக்கிறது. பீட்ரூட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் கனிமச்சத்துக்களான இரும்புச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், சிலிகான் மற்றும் சோடியம் போன்றவை உள்ளன. மேலும் பீட்ரூட் இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியது மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல செரிமான பிரச்சனைகளை தடுக்கக்கூடியது. பசலைக்கீரையில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது மற்றும் இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
விளாம்பழம் மற்றும் இஞ்சி ஜூஸ்
மலச்சிக்கலுக்கான மிகச் சிறந்த வீட்டு மருந்தாக இஞ்சி நம்பப்படுகிறது. இஞ்சி உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் திறன் கொண்டதால், இது செரிமான செயல்முறையை விரைவுப்படுத்த உதவுகிறது. இஞ்சி குடலியக்கத்தை ஊக்குவிக்கும் லேசான மலமிளக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளது. மறுபுறம், விளாம்பழம் மலச்சிக்கலுக்கான ஒரு அற்புதமான ஆயுர்வேத நிவாரணப் பொருளாகும். புளி நீர் மற்றும் வெல்லத்துடன் கலந்த விளாம்பழ சர்பத்தை சாப்பிட்டால், மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
முடிவு
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை எல்லாம் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடவும், குடலியக்கத்தை சீராக்கவும் உதவும் சில ஆரோக்கியமான ஜூஸ்கள் ஆகும். பொதுவாக ஜூஸ்கள் வீட்டிலேயே எளிதில் தயாரிக்கக்கூடியவை. ஜூஸ்களைக் குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து எளிதில் விடுபடலாம். அதிலும் சோர்பிட்டால் கொண்ட உலர் கொடிமுந்திரி, ஆப்பிள், பேரிக்காய் போன்ற ஜூஸ்கள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ஜூஸ்களை அன்றாடம் குடியுங்கள், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.
Comments
Post a Comment