சபரிமலை பற்றிய சிறப்பு தகவல்கள்

கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவில், மிகவும் பிரசித்திபெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். இங்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வருகை தருவார்கள். அதுவும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி மாலை போட்டு விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டும் சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாடு நடைபெற உள்ளது. எனவே வருகிற கார்த்திகை 1-ந் தேதி முதல் பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்குச் செல்வார்கள். இந்தக் கோவிலின் சிறப்புகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

* சபரிமலை ஐயப்பன் கோவிலின் சன்னிதானத்தில் மேற்கூரைப் பகுதியில் ‘தத்துவமசி’ என்று எழுதப்பட்டிருக்கும். இதற்கு ‘நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாகவே இருக்கிறாய்’ என்பது பொருளாகும்.

* சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள், 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.

* சபரிமலை ஐயப்பனை நினைத்து மாலை அணிபவர்கள், அந்த மாலை தன் நெஞ்சில் படும்போதெல்லாம், ஐயப்பன் நம் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை உணர்வதாகக் கூறப்படுகிறது.

* மகிஷியை வதம் செய்த மணிகண்டன், அந்த அரக்கியின் உடல் வளர்ந்து பூமியின் மேல் பகுதிக்கு வரக்கூடாது என்பதற்காக, அவள் உடல் மீது கனமான கல்லை வைத்ததாக தல புராணம் சொல்கிறது. இதை நினைவுகூரும் வகையில்தான், அழுதா நதியில் எடுக்கப்படும் கற்களை, பக்தர்கள் கல்லிடும்குன்று என்ற பகுதியில் போடுகிறார்கள்.

* மனிதனின் மனதில் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை விரட்டும் வகையில்தான், சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களைக் கொண்ட தேங்காய் உடைக்கப்படுகிறதாம். அந்த பதினெட்டாம் படியில் ஏறும்போது பக்தர்கள் அனைவரும் ஐயப்பனிடம் கோரிக்கை வைத்தால் அது உடனடியாக நிறைவேறுமாம். எனவே எவ்வளவு கூட்ட நெரிசலைச் சந்தித்தாலும், பதினெட்டாம் படியில் வைக்கும் கோரிக்கையை பக்தர்கள் எவரும் மறப்பதில்லை என்கிறார்கள்.

* திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல, சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழங்கப்படும் ‘அரவனை பாயசம்’ மிகவும் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து இந்த பிரசாதம் தயாரிக்கப்படுகிறது.

* சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தி அன்று தோன்றும் மகர ஜோதியை, அப்பாச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.

* சபரிமலை ஐயப்பனுக்கு, விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். இதற்கு ‘அஷ்டாபிஷேகம்’ என்று பெயர்.

* சபரிமலை ஐயப்பனின் உற்சவர் திருமேனி, ஆண்டுக்கு ஒரு முறை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் செய்யப்படும். பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில், ஐயப்பனின் உற்சவர் திருமேனியை தரிசிக்க முடியும்.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க.

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி