இன்று தங்கம் வாங்கினால் மகாலட்சுமி....உப்பு வாங்கினால்?


சித்திரை மாதம் அமாவாசை அடுத்து வரும் மூன்றாம் நாளில் வளர் பிறையில் வரும் திருதியை திதி அக்ஷய திதியாகும். கிருதாயுகத்தில் பிரம்மன் உலகை தோற்றுவித்தது இந்நாளில் தான். திரேதா யுகம் தொடங்கியதும் இந்நாளில்தான். பகீரதன் கடுமையாக தவம் புரிந்து பல போராட்டங்களுக்குப் பிறகு கங்கையை பூமிக்கு அழைத்து வந்ததும், கங்கை நீர் பூமியில் பட்டு புண்ணியமான தினமும் அக்ஷயதிருதி அன்றுதான். விஷ்ணு பகவானின் அவதாரமான பரசுராமர் அவதரித்தது இந்நந்நாளில்தான்.

அக்ஷய என்ற வார்த்தை சமஸ்கிருதத்தைக் கொண்டது. எப்போதும் குறையாதது என்னும் பொருளை கொண்டது. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அதே அட்சயம் என்றால் தேயாதது, குறையாதது, வளர்வது என்று பொருள்.

எல்லா நலன்களையும் அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில் நாம் வாங்கும் அனைத்தும் அடுக்கடுக்காய் சேரும் என்பது ஐதிகம். அதனால் விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கும் பழக்கத்தை மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டனர். இன்று அக்ஷய திருதியை என்றால் தங்கம் தான் வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்து விட்டார்கள்.

அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால் தான் செல்வம் பெருகும் என்பதில்லை. அதிகாலையில் எழுந்து நீராடி பூஜையறையை சுத்தம் செய்து லட்சுமி நாராயணர் படம் வைத்து வாழையிலையில் அரிசி பரப்பி, கலசத்தில் மாவிலை கொத்து வைத்து அலங்கரித்து தேங்காயில் மஞ்சள் பூசி, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அவலை நைவேத்யமாக படைத்து வாங்கிய பொருள் எதுவாக இருந்தாலும் நடுவில் வைத்து வழிபட்டால் செல்வம் தங்கும். மேலும் குடை, நீர் மோர், விசிறி, ஆடை என இயன்ற பொருள்களை தானம் கொடுத்தால் தானமும் வளரும் தானத்தால் புண்ணியமும் வளரும். இப்பிறவி முழுமையும் செல்வம் சேரும் என்பது ஐதிகம்.

விலை உயர்ந்த பொருள்கள் வாங்கினால்தான் மஹாலஷ்மி வீட்டில் தங்குவாள் என்ற தவறான எண்ணம் நிலவி வருகிறது. எல்லோராலும் தங்கம் வாங்க முடியுமா? வெள்ளை நிற உப்புக்கல்லை வாங்கி வையுங்கள். பாற்கடலில் அமுதம் கிடையும் போது வெளிவந்தவற்றில் ஒன்று உப்பு. இது லட்சுமி கடாட்சம். உப்பை வாங்கி வைத்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் வீட்டைத் தேடி வந்து நிரந்தரமாக வசிக்கும் என்பதால் அக்ஷய திருதியை அன்று உப்பு வாங்கினாலும் செல்வம் வளரும் என்பது ஐதிகம்.

குசேலன் தன் நண்பனான கிருஷ்ணனை பார்க்க சென்ற போது அவலை எடுத்து சென்றான். கிருஷ்ணர் அவலை அள்ளி வாயில் போட போட வறுமையால் அவதியுற்ற குசேலன் கோடி கோடியாக செல்வம் பெற்றான். இது நடந்ததும் இந்த அக்ஷய திருதியை தினத்தன்றுதான். மகாபாரத கதையில் பாண்டவர்கள் உணவுக்கு துன்பப்படாமல் இருக்க ஸ்ரீ கிருஷ்ணர் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தைக் கொடுத்ததும் இந்த அக்ஷய திருதியை நாளில்தான். ஆக இந்நாளில் செய்யும் தான தர்மங்களும் வளர்ந்து கொண்டே போகும். வாங்கும் செல்வமும் சேர்ந்துகொண்டே போகும்.

தங்கம் வாங்கி மகாலஷ்மியை வேண்டி வரவேற்பது நல்லது தான். அதை விட ஆகச்சிறப்பு லட்சுமி கடாட்சம் குடிகொண்டிருக்கும் கல் உப்பை வாங்கி அனைத்து ஐஸ்வர்யங்களையும் அஷ்ட லஷ்மிகளையும் வீட்டுக்குள் நிரந்தரமாக வசித்திட வழிபடுவது.
செல்வங்கள் வளர தங்கம் வாங்கினாலும் சரி.. வெள்ளை உப்பு வாங்கினாலும்சரி. ஐஸ்வர்யம் பெருகிடும் என்பதில் மாற்றில்லை.

Comments

Popular posts from this blog

காகம் ஏன் உங்களைத் தேடித்தேடி எச்சமிடுகிறது தெரியுமா?

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது... திருஷ்டி சுத்தி போடுவது எப்படி